தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி உள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 
 
தமிழகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எந்தவித தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் படிப்படியாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும். 

ஸ்டாலின்

தமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம். கொரோனா சிகிச்சைக்குத் தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவு உள்ளன. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.