‘கோழிக்கு வயிற்றுப்போக்கு... ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன்’ - ஊரடங்கில் வெளியே சுற்ற போலீசாரிடம் வித்தியாசமான காரணம் கூறிய வாலிபர்

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருகிற ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பின்பு தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக 10 மணிக்கு பின்பு வெளியே சுற்றி திரிபவர்கள் போலீசாரிடம், பொய் தகவல்களை கூறி தப்பிக்க நினைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெங்களூருவில் காரில் சென்று ரேசன் பொருட்களை வாங்க செல்வது, மோட்டார் சைக்கிளுக்கு பதில் சைக்கிளில் சுற்றி திரிவது என புதுபுது காரணங்களை போலீசாரிடம் கூறி வருகிறார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் கதக் மாவட்டத்தில் நடந்துள்ளது.

கதக் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதுபோல், கதக் டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ஒரு வாலிபர் கையில் பையுடன் அங்கு வந்தார். அவரிடம் ஊரடங்கின் போது எதற்காக தேவையில்லாமல் வெளியே சுற்றுகிறீர்கள் என போலீசார் கேட்டனர்.

கோழி

அப்போது அந்த வாலிபர் கூறிய காரணத்தை கேட்டு போலீசார் விழுந்து, விழுந்து சிரித்தனர். அதாவது, அந்த வாலிபர் தான் வைத்திருந்த பைக்குள் இருந்து கோழியை எடுத்து காட்டி, கோழிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாகவும் வித்தியாசமாக ஒரு காரணத்தை கூறினார்.

இதையடுத்து போலீசார், ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் இருந்தாலும் கோழிக்கு ஒன்றும் ஆகாது என கூறி அந்த வாலிபரை திரும்பி செல்லும்படி கூறினார்கள். ஆனாலும் அந்த வாலிபர் தான் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். இதனால் கோபமடைந்த போலீசார், அந்த வாலிபரை எச்சரித்து வீட்டுக்கு செல்லும்படி திரும்பி அனுப்பி வைத்தனர்.