ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற போலீசார்

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தாமல், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து வருவதுடன், அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் பெங்களூரு புறநகர் மாவட்டமான நெலமங்களாவில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்து வரவேற்றும் போலீசார் நூதன தண்டனைக் கொடுத்தனர். இந்த நிலையில், பெங்களூரு பீனியா போலீசார், ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், தேவையில்லாமல் சுற்றிய வாகன ஓட்டிகளை பிடித்து ரோஜா பூ கொடுத்தனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள். அதே நேரத்தில் தேவையில்லாமல் சுற்றிய வாகன ஓட்டிகளிடம் இருந்து வாகனங்களையும் பீனியா போலீசார் பறிமுதல் செய்தார்கள். கார், இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர்கள் போலீசாரிடம் வாகனத்தை கொடுக்கும்படி கேட்டும், அவர்கள் வழங்காமல், வாகனங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ஊரடங்கை மீறிய சில வாகன ஓட்டிகள் மீது என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின்படி பீனியா போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.