கொரோனா வைரஸ் குறைவதற்காக கடவுளுக்கு நேர்ந்துவிட்ட குதிரை செத்ததால் கிராம மக்கள் பீதி - அடக்கம் செய்ய 400 பேர் திரண்டதால் பரபரப்பு

பெலகாவி மாவட்டம் கோகாக் அருகே ஒரு கிராமம் உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்த கிராம மக்கள் பீதியில் இருந்து வந்தனர். ஏதாவது கொடிய தொற்று நோய் பரவும் காலத்தில் கிராமத்தில் இருக்கும் மடத்தின் சார்பில் கடவுளுக்கு குதிரை நேர்ந்து விடுவது வழக்கம். இது அந்த கிராமத்தில் கடந்த 51 ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கிராமத்தில் உள்ள மடத்தின் மடாதிபதி சார்பில் கடவுளுக்கு குதிரை நேர்ந்து விடப்பட்டது.

அந்த குதிரை கடந்த புதன்கிழமை நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை கிராமம் முழுவதும் ஒவ்வொரு சாலையிலும் சுற்றி திரிந்தது. பின்னர் மடத்தில் குதிரை கட்டி போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்ட குதிரை திடீரென்று உயிர் இழந்து விட்டது. கொரோனா பரவல் குறைவதற்காக நேர்ந்து விடப்பட்ட குதிரை செத்ததால் கிராம மக்களிடையே மேலும் பீதி உண்டானது.

குதிரைக்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்

இதையடுத்து, குதிரைக்கு இறுதி சடங்கு நடத்தி நல்ல முறையில் அடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தார்கள். குதிரைக்கு நடந்த இறுதி சடங்கில் கிராமத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுபற்றி அதிகாரிகள், போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதே நேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் கிராம மக்கள் கலந்து கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.

குதிரையின் இறுதி ஊர்வலத்தில் கூடிய மக்கள்

இதையடுத்து, முன் எச்சரிக்கையாக கிராமத்தில் கொரோனா பரவாமல் இருக்க, கிராமத்தையே அதிகாரிகள் சீல வைத்துள்ளனர். மேலும் அரசின் விதிமுறைகளை மீறி 400 பேர் திரண்டதாக, கோகாக் போலீஸ் நிலையத்தில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோகாக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.