மாற்றுத்திறனாளியான அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த தங்கை - ஒரே வாலிபரை மணந்தனர்

பொதுவாக திருமணம் ஆன பெண்கள் தங்களது கணவரை யாரும் பங்கு போட்டுக் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால் கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளியான அக்காளுக்கு, ஒரு தங்கை தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்துள்ளார். 
அதுபற்றிய விவரம் பின்வருமாறு: கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஆவார். இவரது தங்கை பெயர் லலிதா.

மாற்றுத் திறனாளி என்பதால் சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அவர்களின் திருமணம் நேற்று நடக்க இருந்தது.

இந்த நிலையில் மாற்றுத் திறனாளி என்பதால் எனது அக்காவை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என்றும், இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் எனவும் உமாபதியிடம், லலிதா கூறியதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு உமாபதி முதலில் மறுத்தார். ஆனால் எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்துக் கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம், லலிதா திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

பின்னர் இதற்கு ஒருவழியாக சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் கலந்துபேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு ஒரே மேடையில் தாலி கட்டினார். இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி சென்றனர். மேலும் மாற்றுத் திறனாளி அக்காளுக்கு தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.