ரேசன் பொருட்கள் கிடைக்காததால் தேசிய விருதை திருப்பி கொடுத்த பழங்குடியின பெண்

தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா ராத் அன்டாலே பாடா கிராமத்தை சேர்ந்தவர் ஹாலி ரகுநாத் பரப்(வயது20). இவர் 15 வயது சிறுமியாக இருந்த போது கூட்டமாக வந்த சிறுத்தை புலிகளுடன் துணிச்சலுடன் போராடி அவரது கர்ப்பிணி அக்காவை காப்பாற்றினார். எனவே அவருக்கு வீரத்தீர செயல் புரிந்ததற்கான ‘வீர் பாபுஜி காந்தானி ராஷ்ட்ரிய பல்வீர்' தேசிய விருது கடந்த 2013-ம் ஆண்டு வழங்கப்பட்டு இருந்தது.

ஹாலி ரகுநாத் பரப்

இந்தநிலையில் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க முடியாததால், அவர் அந்த விருதை திருப்பி அளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேசிய விருது எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆன்லைனில் எங்கள் குடும்ப நபர்களின் பெயர் இல்லாததால் எங்கள் வீட்டுக்கு ரேசன் கடையில் அரிசி, பருப்பு கூட வாங்க முடியவில்லை. எங்கள் தாலுகாவில் சுமார் 400 குடும்பத்தினர் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த நிர்வாக அலட்சியத்திற்கு எதிராக எனது விருதை பிவண்டி துணை மண்டல அதிகாரியிடம் திருப்பி கொடுத்து உள்ளேன்’’ என்றார்.